Thursday, January 2, 2014

சாஸ்திரம்பாக்கம்: செங்கல்பட்டு அருகே ஓர் ஆதிச்சநல்லூர் (Sasthirambakkam)


காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டு அருகே சாஸ்திரம்பாக்கத்தில் ஆதிச்சநல்லூரில் கண்டுபிடிக்கப்பட்டது போல அரியவகை முதுமக்கள் தாழிகள் ஏராளமாக புதையுண்டு கிடக்கின்றன.
ரியல் எஸ்டேட் முதலைகளின் கையில் சிக்கியுள்ள அப்பகுதிகளை மீட்டு அகழ்வாய்வுக்கு உத்தரவிட்டு, தமிழர்களின் அரிய நாகரிகத்தை உலகுக்கு எடுத்துக்காட்ட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. பண்டைய நாகரிகங்கள் எல்லாம் ஆற்றங்கரையில்தான் தோன்றியுள்ளன என்று அறிஞர்கள் கூறுகின்றனர். ஆம்... பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சிந்து நதிக்கரையில் தோன்றிய சிந்து சமவெளி நாகரிகம் குறித்து இன்றும் நாம் பேசி வருகிறோம்.

இதேபோல் தமிழகத்தில் திருநெல்வேலி மாவட்டம், தாமிரபரணி ஆற்றங்கரையில் ஆதிச்சநல்லூரில் 11 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த நம் தமிழ் சமுதாயத்தின் வரலாறு புதைந்து கிடந்தது.

ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இந்தியத் தொல்பொருள் ஆய்வுத் துறை 1876-ல் முதல்முதலாக அகழ்வாய்வு மேற்கொண்டது.

இதன் மூலம் நம் தமிழ் சமுதாயத்தின் அரிய தகவல்கள் கிடைத்தன. இது இன்றைக்கும் உலக அளவில் பேசப்படுகிறது. அங்கு கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள்தாழிகளே சிறப்புக்குரியவை என்றும் அகழ்வாய்வுகள் கூறுகின்றன.

காஞ்சிபுரம் மாவட்டம்: அந்த வகையில் காஞ்சிபுரம் மாவட்டத்திலும் பல்லாவரம், செங்கல்பட்டு, கல்பாக்கம் அருகே கீழகழனி, மலைவையாவூர், பழவேரி, இளநகர், ஆப்பூர் ஆகிய பகுதிகளில் முதுமக்கள்தாழி உள்ளிட்ட பல அரிய பொக்கிஷங்கள் கிடைத்துள்ளன. ÷குறிப்பாக பாலாற்றுக் கரையில் செங்கல்பட்டை அடுத்த பாலூர் அருகே சாஸ்திரம்பாக்கம் என்ற கிராமத்தில் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நம் சமுதாயம் வாழ்ந்ததற்கான பல அரிய சான்றுகள் புதையுண்டு கிடைக்கின்றன.

குறிப்பாக பாலூர் பாலாற்றங்கரைக்கு வடக்கே, வெங்கடாபுரம், சாஸ்திரம்பாக்கம், வெண்பாக்கம், குருவின்மேடு, தாசரிகுன்னத்தூர் என வட்ட வடிவில் அமைந்துள்ள மலைகளுக்கு மத்தியில் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மக்கள் வசித்துள்ளனர். ÷குறிப்பாக சாஸ்திரம்பாக்கம் மலைகளைச் சுற்றி ஆதிச்சநல்லூரில் காணப்படும் அதே வகையிலான அரிய வகை இடுகாடு காணப்படுகிறது.

இறந்தவர்களின் உடலை 6 அடி முதல் 15 அடி வரை ஆழத்தில் முதுமக்கள்தாழிகளில் வைத்து புதைத்துள்ளதற்கான ஆதாரங்கள் உள்ளன. மேலும் அவ்வாறு புதைத்தப் பிறகு அவர்களது நினைவாக கற்படைவட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதாவது இறந்தவர்களின் உடலை புதைத்துவிட்டு அதைச் சுற்றி கற்களை அடுக்கி நினைவுச் சின்னங்கள் எழுப்பியுள்ளனர்.

இப்போது சில கற்படைவட்டங்கள் மட்டுமே மிச்சம் இருக்கின்றன. வேகமாக வளர்ந்து வரும் ரியல்எஸ்டேட் தொழில், மலைஅடிவாரம் வரை வந்து நமது பாரம்பரிய சின்னங்களை அழித்து வருகின்றன.

மலைஅடிவாரத்தைச் சுற்றி, புதையுண்ட முதுமக்கள்தாழிகளின் விழிப்புகள் வெளியே தெரியும் வண்ணம் இப்போது அழிவை நோக்கி சென்று கொண்டுள்ளது.

மேலும் பழங்கால கற்சிலை ஒன்று இப்போது அப்பகுதி மக்களால் அனிச்சியம்மன் என்று வழிபடப்படுகிறது. இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த விஜி மற்றும் சதுரங்கபட்டிணத்தைச் சேர்ந்த ஸ்டாலின் ஆகியோர் கூறியது:

"சாஸ்திரம்பாக்கம் மலையடிவாரம் மட்டுமின்றி இப்பகுதிகளைச் சுற்றியுள்ள அனைத்து மலை அடிவாரங்களிலும் அரியவகை சின்னங்கள் புதைந்து கிடைக்கின்றன. ÷சாஸ்திரம்பாக்கம் பகுதியில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு அரசுப் பணிக்காக தோண்டியபோது, முதுமக்கள்தாழி கண்டெடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இப்பகுதியில் இனியாரும் தோண்டக் கூடாது என்று உத்தரவிடப்பட்டிருந்தது. ஆனாலும், இப்பகுதியில் அகழ்வாய்வுகள் மேற்கொள்ளப்படவில்லை. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த கற்படைவட்டங்கள் கூட இப்போது காணவில்லை. எல்லாம் ரியல்எஸ்டேட் செய்யும் மாயம்.

தமிழக அரசு இப்பகுதியில் ரியல் எஸ்டேட்டுக்கு தடைவிதித்து அகழ்வாய்வுக்கு உத்தரவிட்டால், பல அரிய தகவல்களை உலம் அறிய செய்யலாம்' என்றனர்.

ஆதாரம்:-

http://www.dinamani.com/tamilnadu/2013/12/24/செங்கல்பட்டு-அருகே-ஓர்-ஆதிச/article1962239.ece







1 comment:

  1. our historical revolution in our earth. we need a struggle to take it away. our honesty history has so many breakers in power.We continue our trawel in between of trueth and power.

    ReplyDelete