பண்ருட்டி அருகே உள்ள கணிசப்பாக்கத்தில் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டது. இதுபற்றிய சுவாரசியமான தகவல்கள் தெரியவந்துள்ளது.
குடுவைகள்
பண்ருட்டி அருகே உள்ள கணிசப்பாக்கத்தில் வைரக்கண்ணு என்பவருக்கு சொந்தமான நிலத்தில் மீன்வளர்ப்புக்காக பண்ணைகுட்டைகள் அமைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு இருந்தனர். அப்போது நிலத்துக்குள் புதைந்திருந்த பழமையான 2 முதுமக்கள் தாழிகள் மக்கிய நிலையில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த தாழிகளை ஆய்வு செய்த தொல்பொருள் மற்றும் கல்வெட்டு ஆய்வாளர் பண்ருட்டி தமிழரசன் முதுமக்கள் தாழிகள் பற்றி கூறிய சுவாரசியமான தகவல்கள் இதோ...
கணிசப்பாக்கத்தில் கிடைத்துள்ள தாழிகளின் மேல் விளிம்புகளுடன் கூடிய மேல்மூடிகள் உள்ளன. மேலும் தாழிக்குள் 3 அடுக்குகள் கொண்ட மண் தட்டுகளும், சிறு சிறு குடுவைகளும் இருப்பதாக தெரிகிறது. இந்த முதுமக்கள் தாழிகளை நம் முன்னோர்கள் ‘முசுமுசுங்கை சால்’ என்ற வழக்கு சொல்லில் அழைத்தனர்.
எலும்பு கூடுகள்
பழங்காலத்தில் முதுமையடைந்து படுத்த படுக்கையாக கிடக்கும் முதியவர்களை பராமரிக்க முடியாமல் அப்போது வாழ்ந்து வந்த மக்கள், இது போன்று தாழிகளில் வைப்பார்கள். அதோடு அவர்கள் பயன்படுத்திய முக்கிய பொருட்கள் மற்றும் உணவினையும் தாழிக்குள் வைத்து மூடி புதைத்து விடுவது வழக்கம்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கிடைத்த முதுமக்கள் தாழிகளில் இறந்தவர்களின் எலும்புகூடுகள் மற்றும் அவர்கள் பயன்படுத்திய கத்தி, ஈட்டி, அம்பு போன்ற ஆயுதங்கள் மக்கி போய் கிடைத்துள்ளது.
5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது
தாழிக்குள் இருக்கும் மனித எலும்பு கூடுகள் 2 ஆயிரம் முதல் 3 ஆயிரம் ஆண்டுகளுக்குள் மக்கி மண்ணாகி விடும். கணிசப்பாக்கத்தில் கிடைத்த தாழிகளில் எலும்புகூடுகள் உள்பட எந்த பொருளும் இல்லை. இதனால் அவை சுமார் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையதாக இருக்கும் என்று கருதபடுகிறது.
பண்ருட்டி அருகே கணிசப்பாக்கத்தில் முதுமக்கள் தாழி கிடைத்ததன் மூலம் இங்கு 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே மக்கள் குடியிருந்துள்ளனர் என்பது தெரியவருகிறது. இது தவிர தாழிகள் கிடைத்துள்ள இடத்தில் அடி மட்டத்தில் இருந்து 4 அடி வரை களிமண்ணும், அதன் கீழ் 15 அடி வரையில் ஆற்றுமணலும் உள்ளன. இதனால் முந்தைய காலத்தில் கணிசப்பாக்கத்தில் பெரிய ஆறு பாய்ந்தோடியிருக்கலாம், காலப்போக்கில் ஆற்றின் போக்கு மாறியிருக்கலாம் எனவும் தெரிகிறது.
No comments:
Post a Comment