Monday, January 13, 2014

அரிக்கமேடு (ARIKAMEDU)


வணிகம் செய்ய வந்த யவனர்களில் ஒரு பிரிவினர் தமிழகத்திலேயே தங்கி விட்டனர். அவர்களே இங்கு கலை வளர்ச்சிக்கு முக்கியத் தூண்டுகோலாக இருந்தனர். 'யவனர் போல முயற்சிகொள்’ என்று பாரதியார் குறிப்பிட்டுள்ளது முக்கியமானது. யவனர்களில் ஒரு பிரிவினர் கொங்கணக் கடற்கரையை ஒட்டிய பகுதியில் குறுநில மன்னர்களாக ஆட்சி செய்தும் இருக்கின்றனர். வணிகர், படைவீரர், கலைஞர், தூதுவர், கொடையாளி, குறுநில மன்னர் எனப் பல்வேறு நிலைகளில் யவனர்கள் தமிழகத்தில் வாழ்ந்திருக்கின்றனர். அந்த நினைவு கள் தமிழக வரலாற்றின் ஊடாக தனித்த மேகங்களாக மிதந்துகொண்டிருக்கின்றன.

யவனர் காலம் முதலே புதுச்சேரியை அடுத்துள்ள அரிக்கமேடு வரலாற்றுச் சிறப்புமிக்க துறைமுக நகரமாக விளங்கியிருக்கிறது. கி.பி. முதல் மற்றும் இரண்டாம் நூற்றாண்டுகளில் புகழ்பெற்று விளங்கிய இந்த நகரம் இன்று மண்மேடாகக் காட்சியளிக்கிறது. இன்றைய புதுச்சேரிக்குத் தெற்கே ஆறு கிலோ மீட்டர் தூரத்தில் அரியாங்குப்பம் ஆற்றின் வலது கரையில் அரிக்கமேடு அமைந்துள்ளது. அந்த இடத்தில் மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி ஓடிய ஆறு வளைந்து வடக்கு நோக்கிச் சென்று கடலில் கலக்கிறது. கி.பி. முதல் மற்றும் இரண்டாம் நூற்றாண்டுகளில் தென்னிந்தியாவில் பயணம்செய்த கிரேக்கப் பயணிகள் தென்னிந்தியத் துறைமுகங்கள் பற்றி சிறுகுறிப்புகளை எழுதியிருக்கின்றனர். அவற்றில், 'பெரிபிளஸ் ஆஃப் எரித்ரயென்’ மிகவும் முக்கியமானது. இதில் சோழமண்டலக் கரையில் உள்ள துறைமுகங்களைப் பற்றிய குறிப்புகள் இருக்கின்றன.

கிழக்குக் கடற்கரையில் வணிகச் சந்தை கூடும்போது டிமிரிகாவில் இருந்தும் வடக்கு துறைமுகங்களில் இருந்தும் வரும் கப்பல்கள் தங்குவதற்கு வசதியான இடங்களாக கருதப்படுவது காமரா. அதற்கடுத்தது பொதுகே மற்றும் சோபட்மா ஆகியவை. இவற்றில், டிமிரிகா எனக் குறிப்பிடப்படுவது தமிழகம், காமரா என்பது காவிரிப் பூம்பட்டினம், சோபட்மா என்பது மரக்காணம். பொதுகே என்பது அரிக்கமேடு என்று, வரலாற்று ஆய் வாளர்கள் கருதுகின்றனர். மிளகு ஏற்றிச்செல்ல வரும் கப்பல்கள் தங்குமிடமாக தமிழகத் துறைமுகங்களில் ஒன்றாக பொதுகே நிலவியது என்று ஆய்வாளர் தாலமி குறிப்பிடுகிறார்.

காவிரிப்பூம்பட்டினம் மற்றும் பொதுகே ஆகிய இரண்டையும் எம்போரியம் என்று அழைக்கின்றனர். அதாவது, பாய்மரக் கப்பல்கள் வந்து தங்கிச் செல்லும் துறைமுகம் என்பது அதன் பொருள்.  ரோம வணிகர்கள் தங்களின் பொருட்களை சேமித்துவைக்கும் இடத்தையும் எம்போரியம் என்றே அழைத்தனர். அப்படி, பொருளை சேமித்துவைத்து தங்களின் நாட்டில் இருந்து வரும் உத்தரவுக்கு ஏற்ப அவர்கள் வாணிகம்செய்த துறைமுகங்கள்தான் இவை இரண்டும் என்கிறது வரலாற்றுக் குறிப்பு. காவிரிப்பூம்பட்டினம் பற்றி நிறைய இலக்கியச் சான்றுகளை நாம் காண முடிகிறது. ஆனால், பொதுகே பற்றி எந்தக் குறிப்பும் இல்லை.

ஒருவேளை, சோழர்களின் தலைநகராக 'புகார்’ இருந்தது காரணமாக இருந்திருக்கக்கூடும். பொதுகே வெறும் வணிக நகராக மட்டுமே இயங்கியது என்பதால், இலக்கிய முக்கியத்துவம் பெறாமலேயே போயிருக்கக்கூடும். பொதுகே இன்று அரிக்கமேடு என்று அழைக்கப்படுகிறது. ''ஆற்றங்கரை அருகே அமைந்துள்ள மேடு என்பதால் அரிக்கமேடு என்று அழைக்கப்பட்டிருக்கலாம்'' என்கிறார் வரலாற்று ஆய்வாளர் கே.ஆர்.சீனிவாசன். செஞ்சி ஆற்றின் கிளை நதியான அரியாங்குப்பத்தாறு கடலில் கலக்கும் நீர்வழியில் அமைந்துள்ள மேடு என்றும் நிலர் பொருள் கூறுகின்றனர். கி.பி. 100 முதல் 220-ம் ஆண்டு வரை இந்தப் பகுதியில் புத்தர் வழிபாடு இருந்திருக்கிறது. ஆகவே, அரிங்கன்மேடு அதாவது புத்தன் மேடு என்பதே அரிக்கமேடு ஆகியது என்றும் ஒரு சாரார் கூறுகின்றனர். ஆனால், இவை இரண்டையும்விட இது சமணப்பெயரின் மிச்சமே என்கிறார் அரிக்கமேட்டை ஆராய்ச்சி செய்துள்ள தில்லை வனம்.

அரிக்கமேடு என்பது சமண சமயக்கடவுள் அருகனோடு தொடர்பு கொண்டது. சந்திரகுப்தர் காலத்தில் சமண வழிபாடு தென்னிந்தியாவில் பரவியிருந்தது. அதன்படி, பல்வேறு ஊர்களில் சமண தீர்த்தங்கரர்களின் சிலைகள் நிறுவப் பட்டன. அப்படி உருவான அருகன் வழிபாட்டுத் தலமே அரிக்கமேடு என்கிறார். இதற்கு ஆதாரமாக இந்தப் பகுதியில் சமண தீர்த்தங்கரர் சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டுகிறார் தில்லை வனம்.

ஆனால், பௌத்த சிற்பங்களும் மிச்சங்களும் இருப்பதைக் கணக்கில் எடுத்துக்கொள்ளும்போது இது ஒரு பௌத்த ஸ்தலமாகவே இருந்திருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. பண்டைய பொதுகே துறைமுகம் மிகப் பெரியதாக இருந்திருக்கக்கூடும். பண்டக சாலைகள், தொழிற் கூடங்கள் மற்றும் குடியிருப்பு கள் அடங்கிய பெரிய நகர மாகவே இருந்திருக்கலாம். ஆகவே, வீராம்பட்டினம், காக் காயந்தோப்பு, அருகன்மேடு, சின்னவீராம்பட்டினம் ஆகியவை ஒன்று சேர்ந்து பழைய பொதுகேயாக இருந் திருக்கக்கூடும். பொதுகே பகுதியில் சமண பௌத்தத் துறவிகளுக்கான தவப்பள்ளிகள் அமைக்கப்பட்டிருந்தன. அந்த இடம் சாக்கியன் தோப்பு என்று அழைக்கப்பட்டிருக்கிறது. இதுவே மருவி இன்று காக்கயன்தோப்பு என்று அழைக்கப்படுகிறது. இது பௌத்த நினைவின் மிச்சம்.

1779-ம் ஆண்டு வரை அரிக்கமேட்டின் வரலாற்று முக்கியத்துவத்தை எவரும் உணர்ந்திருக்கவில்லை. இந்தப் பகுதியில் செங்கல் சூளைகள் அதிகமாக இருந்திருக்கின்றன. அப்படி ஒரு செங்கல் சூளைக் காகத் தோண்டப்பட்ட குழிக்குள் சீனக் களிமண் ஜாடிகள் கண் டெடுக்கப்பட்டன. அதன் பிறகே இங்கு அகழ்வாய்வுப் பணி செய்யப்பட்டது.

அரிக்கமேட்டின் பெருமையை உலகுக்கு அறிமுகப்படுத்தியவர் லெழாந்துய் என்ற பிரெஞ்சுக்காரர். வானவியல் ஆய்வுக்காக புதுச்சேரியில் தங்கியிருந்த இவர், வரலாற்றுச் செய்திகளில் ஆர்வம்கொண்டு இந்தப் பகுதியை ஆராய்ந்தார். இவர் சேகரித்த தகவல்களைக்கொண்டு இவர் எழுதிய நூலில் அரிக்கமேட்டின் சிறப்புகளைக் குறிப்பிட்டுள்ளார். அதன் பிறகு, ஒரு நூற்றாண்டு காலம் யாரும் இந்தப் பகுதியில் எந்த ஆய்வும் நடத்தவில்லை. 1937-ல் புதுச்சேரி பிரெஞ்சுக் கல்லூரிப் பேராசிரியர் ழுவோ துய்ப்ராய், அரிக்கமேடு பகுதியில் காணப்பட்ட மண்பாண்டங்கள், மணிகள் ஆகியவற்றைச் சேகரித்து விரிவான ஓர் ஆய்வு நடத்தி, லெ செமோர் என்ற ஆய்வு இதழில் கட்டுரை எழுதி இருக்கிறார்.

இந்தக் கட்டுரையில் ஆர்வம்கொண்டு வியட் நாமில் இருந்து கொலுபேவ் என்ற அறிஞர் அரிக்கமேட்டுக்கு வந்தார். அவர் பல்வேறு தொல்பொருள் ஆய்வுகளை நடத்தி, அதன் வரலாற்றுத் தொன்மையை ஆராய்ந்தார். 1940-ம் ஆண்டு சென்னை அருங்காட்சியகத் தலைவராக இருந்த ஐயப்பன், அரிக்க மேட்டில் ஆய்வு நடத்தி, தொல்பொருள் சின்னங்களை சேகரித்தார். அரிக்கமேடு என்பது தென்னிந்தியாவின் தட்சசீலம் போன்றது என்று, ஐயப்பன் தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

இதன் பிறகு, 1944-ல் இந்தியத் தொல்பொருள் ஆய்வுத் துறையின் இயக்குனராக இருந்த மார்ட்டிமர் வீலர் அரிக்கமேட்டைப் பற்றி கேள்விப்பட்டு, புதுவைக்கு வந்தார். இங்கு கிடைத்த சான்றுகளை ஆராய்ந்து, இதை விரிவாக ஆய்வுசெய்ய உத்தரவிட்டார். இதன் தொடர்ச்சியாக, மூன்று மாதங்கள் அரிக்கமேட்டில் தீவிர அகழ்வாய்வு செய்யப்பட்டடன. அந்த ஆய்வில் கிடைத்த மட்கலங்கள் கி.பி. முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என்பது உறுதிப்படுத்தப்பட்டன.

கல்வெட்டியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன், அரிக்கமேடு பானை எழுத்துகள் பற்றி எழுதிய கட்டுரை, உலகின் கவனத்தை ஈர்த்தது. அதன் பிறகு, அமெரிக்கப் பல்கலைக்கழகங்கள் அரிக்கமேடு ஆய்வில் கவனம் செலுத்தத் தொடங்கின.

1941 முதல் 1992 வரை அரிக்க மேட்டில் செய்த பல்வேறு அகழ் வாய்வுகளில் மட்கலன்கள், மணி வகைகள், அணிகலன்கள், கண்ணாடிப் பொருட்கள், நாணயங்கள், உறைகிணறுகள், சாயத்தொட்டிகள், விளையாட்டுப் பொருட்கள் மற்றும் விளக்குகள் ஆகியவை கண்டெடுக்கப்பட்டுள்ளன. விமலா பெக்லி தலைமை யில் நடந்த ஆய்வில் சங்கு வளையல்கள், காதணிகள், வண்ணம் தீட்டப் பயன்படும் குச்சிகள், மரச்சீப்பு, சுடுமண் விலங்கு பொம்மைகள், நீலக் கண்ணாடிக் கோப்பைத் துண்டுகள், தமிழ் பிராமி எழுத்து பொறிக்கப்பட்ட பானை ஓடுகள், ஆம்போரா சாடி போன்றவை கிடைத்துள்ளன. பண்டைய காலங்களில் மத்தியத் தரைக்கடல் நாடுகளில் மது, ஆலிவ் எண்ணெய் போன்றவற்றை சேமித்துவைக்க ஆம்போரா ஜாடிகளைப் பயன்படுத்துவர். இந்த ஜாடிகளை ரோமானியர்கள் தமிழகத்துக்குக் கொண்டுவந்திருக்கின்றனர். இது, மென்மையான களிமண்ணால் வனையப்பட்டு, பழுப்பு நிறத்திலும் இளஞ்சிவப்பு நிறத்திலும் காணப்படும்.

ஆம்போரா ஜாடியின் அடிப்பகுதி கூர்மையாகவும், கழுத்துப் பகுதியில் இருபுறமும் கைப்பிடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால், இதை எடுத்துச் செல்வது எளிது. இந்த ஜாடிகள் கி.மு. 100-ல் இந்தியாவுக்குக் கொண்டுவரப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

இதுபோலவே, மத்தியத் தரைக்கடல் நாடுகளில் செய்யப்பட்டு வந்த ரௌலெட்டே எனும் மட்கலன்கள் விசேஷமானவை. இந்தக் களிமண் இந்தியாவில் கிடைக்காது. உருக்கு மற்றும் சாம்பல் நிறத்தில் காணப்படும் இந்த மட்கலன்கள் ரோமானியர்களால் தமிழகத்துக்குக் கொண்டுவரப்பட்டிருக்கின்றன. அழகுமிக்க இந்த மட்கலன்கள் தமிழகத்தில் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் கிடைத்திருக்கின்றன. களிமண் கூஜா ஒன்றும் அரிக்கமேட்டு ஆய்வில் கிடைத்துள்ளது. இது, ஆப்பிரிக்க நாடுகளில் காணப்படுவது. குளிர்ந்த நீரை சேமித்துவைத்துக் குடிக்கப் பயன்படுத்தப்படும் இந்தக் கூஜா, கடற்பயணத்தில் கொண்டுவரப்பட்டிருக்கலாம் என்று வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

அரிக்கமேடு அகழ்வாய்வுகள் வெளிப்படுத்திய கட்டடப் பகுதிகளுக்குள் முக்கியமானது, அதன் பண்டக சாலை. செவ்வக வடிவம்கொண்ட இந்தப் பண்டகசலை, பெரிய செங்கற்களால் கட்டப்பட்டுள்ளது. பண்டக சாலை ஆற்றங்கரையை நோக்கி இருக்கும்படி கட்டப்பட்டு இருக்கிறது. அதுபோலவே, துணிகளுக்கு சாயமிடும் சாயப் பட்டறைகளும், தொட்டிகளும் அரிக்கமேட்டில் இருந்திருக்கின்றன. அவற்றில் இருந்து கழிவு நீர் வெளியேறிச் செல்வதற்கு வசதியாக சிறு வாய்க்கால்கள் தனியே அமைக்கப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த கட்டுமானப் பணிகள் சிந்துச் சமவெளி நாகரிகத்தின் மறுபக்கம் போலவே இருக்கிறது. சங்குக் கண்ணாடி ரத்தினக் கற்கள், படிகக் கற்கள் ஆகியவை அரிக்கமேட்டில் கிடைத்துள்ளன. இதைக் கருத்தில்கொள்ளும்போது, அங்கே மணி உருவாக்கும் தொழிற்சாலை இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது. முற்றுப்பெறாத சங்கு வளையல்கள் அரிக்கமேட்டுப் பகுதியில் அதிகம் கிடைத்துள்ளன. சிறிய சங்குகளை அறுத்து காதணிகள் செய்திருக்கின்றனர்.  தாமிரத்தால் செய்யப்பட்ட கிலுகிலுப்பை, குழவிக்கற்கள், முதுமக்கள் தாழி, மரச்சுத்தி எனப் பல்வேறு அரிய பொருட்கள் அரிக்கமேடு ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. வணிகம் காரணமாக ரோமானியர்கள் தமிழகம் வந்திருந்தபோதும் அவர்களின் பண்பாடும் கலைகளும் தமிழகத்தில் ஊடுருவி, பண்பாட்டுக் கலப்பு ஏற்பட்டுள்ளது.  

ரோமானியர்கள் இந்தியாவுக்குக் கடலில் பயணம்செய்து வருவதற்கு பருவக்காற்றே முக்கிய துணையாக அமைந்திருந்தது. இந்தப் பயணங்கள் வடமேற்குப் பருவக் காற்று சாதகமாக வீசும் பருவகாலத்தில் நடந்திருக்கிறது. எகிப்தில் இருந்து இந்தியாவுக்குப் புறப்படும் பயணம் ஜூலையிலும், இந்தியாவில் இருந்து எகிப்து செல்லும் பயணம் கோடையிலும் தொடங்கி இருக்கிறது. ஒரு பயண காலம் என்பது மூன்று மாதங்கள். ரோமானியர்கள் எகிப்திய துறைமுகத்தில் சரக்கு ஏற்றிக்கொண்டு செங்கடலின் கீழ்முகமாகப் பயணம் செய்து அரேபியத் துறைமுகமான மூசாவைக் கடந்து பாபல் ஜலசந்தி வழியாக அரேபியாவின் தெற்குத் துறைமுகமான கானேவில் தங்கி, அங்கிருந்து இந்தியாவுக்கு வந்திருக்கின்றனர்.  

அவர்களில் ஒரு பிரிவினர் அரபிக் கடலில் பயணம்செய்து குஜராத்தை அடைந்திருக்கின் றனர். மற்ற குழுவினர் மலபார் பகுதியை அடைந்து அங்கிருந்து கடல் வழியாக அரிக்கமேட் டுக்கு வந்திருக்கின்றனர். முசிறி மற்றும் அரிக்கமேடு துறைமுகங்கள், கப்பல்கள் வந்து தங்கும் தளமாக மட்டுமின்றி சரக்குகளை பெரிய கப்பலில் இருந்து சிறிய படகுகளுக்கு மாற்றி சிறிய துறைமுகங்களுக்கு செல்வதற்கு உதவி செய்வதற்கும் வசதியுள்ள இடமாக இருந்தன. அரிக்கமேட்டின் வட பகுதியில் தனியான படகுத்துறை ஒன்று இருந்தது. அரிக்கமேட்டை அடைந்த ரோமானியப் பொருட்கள் அங்கிருந்து வடக்கே வசவசமுத்திரம் தெற்கே அழகன் குளம் ஆகிய பகுதிகளுக்குக் கொண்டுசெல்லப்பட்டன. பிறகு, அழகன் குளத்திலிருந்து வைகை ஆற்று வழியாக மதுரைக்குப் பொருட்கள் கொண்டு செல்லப்பட்டன.

பல்வேறு பொருட்கள் ரோமானியர்களால் இறக்குமதி செய்யப்பட்டது போலவே தந்தம், மிளகு, தேக்கு, அகில், வாசனைத் திரவியங்கள், பட்டு, முத்து ஆகிய பொருட்கள் தமிழகத்தில் இருந்து ரோமுக்குக் கொண்டுசெல்லப்பட்டன. இந்த வணிக முயற்சிகளுக்கு ரோமானியப் பேரரசு, தமிழக மன்னர்களுடன் முறையான வணிக ஒப்பந்தங்களைச் செய்திருந்தது. வெளிநாட்டு வணிகர்களிடம் சுங்க வரி வசூலிக்கும் பழக்கம் அரிக்கமேட்டிலும் இருந்திருக்கிறது, இந்த வரிப் பணத்தைக்கொண்டு துறைமுகக் கட்டுமானப் பணிகள் செய்யப்பட்டு இருக்கின்றன. பழந் தமிழர் வாழ்வியலுக்கு சான்றாகத் திகழும் அரிக்கமேடு, மிக முக்கியமான வரலாற்றுப் பெட்டகம். அங்கே இன்னமும் முழுமையாக ஆய்வுகள் செய்யப்படவில்லை. இதுவரை நடந்த முக்கிய ஆய்வுகள்கூட அயல்நாட்டினர் செய் தவைதான்.

சிந்துச் சமவெளி ஆய்வை மட்டுமே பிரதானமாகக் கவனம்கொள்ளாமல் இதுபோன்ற தொன்மையான இடங்களையும் இந்தியத் தொல்பொருள் துறை விரிவாக ஆய்வுசெய்ய வேண்டும். அப்படி ஆய்வுசெய்தால், அறியப்படாத உண்மைகள் உலகின் வெளிச்சத்துக்கு வரும்.

Arikamedu is an archaeological site in Kakkayanthope, Ariyankuppam Commune, Puducherry. It is located at a distance 7 km from its capital Pondicherry, in the Indian territory of Puducherry, where Mortimer Wheeler conducted his best-known excavation in the 1940s. Arikamedu - 'Arikan-medu or Poduke’ which literally means, ‘eroding mound’.roman lamps, glassware and gemm also been found at the site According to Wheeler, Arikamedu was a Tamil fishing village which was formerly a major Chola port dedicated to bead making and trading with Romantraders. Various Roman artifacts, such as a large number of amphorae bearing the mark of Roman potter schools VIBII, CAMURI and ITTA, have been found at the site, supporting the view on an ancient trade between Rome and the ancient Tamil country of present day south India. Now Arikamedu is a part of Ariyankuppam Commune. Arikamedu was an important bead making centre.

Arikamedu is known to have been inhabited from pre first century times and was more or less continually occupied until modern times



























No comments:

Post a Comment